Sacred Mantras

Chants for Divine Vibration

ஓம் சக்தி மூல மந்திரம்

ஓம் சக்தியே! பராசக்தியே! ஓம் சக்தியே! ஆதிபராசக்தியே! ஓம் சக்தியே! மருவூர் அரசியே! ஓம் சக்தியே! ஓம் விநாயகா! ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே! ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமாட்சியே!

சக்தி வழிபாடு

ஓம் சக்தி வாழ்க! ஓங்காரப் பொருள் வாழ்க! ஆம் சக்தி இவளென்றே அனைவோரும் தொழ வாழ்க! அண்டங்கள் ஈன்றவளே! அகிலாண்ட நாயகியே! விண்டுரைக்க ஏலாத விரிசடையோன் துணையவளே! எண்ணுக்கும் எழுத்துக்கும் எட்டாமல் இயல்பவளே! கண்ணுக்கும் கருத்துக்கும் காணாமல் நிற்பவளே! அன்புருகி நெஞ்சுருகி அழுதே பணிவார்க்குக் கல்மனமும் கரைந்துருகக் காட்சிதரும் காரிகையே! பிறைசூடும் பெம்மானும் பாற்கடலைக் கொண்டானும் நறை மிக்க தாமரையை நல்லிடமாய்க் கொண்டானும் 10 விண்ணவரும் மண்ணவரும் மற்றுமுள்ள உயிர்க்குலமும் எண்ணற்ற நான் மறையும் ஏத்துகின்ற மூத்தவளே ஆதிபரா சக்தியென ஆன தொரு பேர்பெற்றுப் பேதித்த பல்சமயக் குழுக்கள்தம் உட்பொருளே! மருவத்தூர்க் குடிவந்து மாந்தர்க்கு வாழ்வளித்து உருவத்தைக் காட்டாமல் உவந்தெம்மைக் காப்பவளே! தாமங் கடம்பென்பர் படைபஞ்ச பாணமென்பர் நாமம் பலவாக நவில்கின்ற நாயகியே! காஞ்சியிலே காமக் கணியாக வீற்றிருந்து வாஞ்சையுடன் சமயபுர மாரியென வாழ்ந்திருந்து 20 ஆலவாய் அழகர்க்கு அங்கயற்கண் ணானவளே! நாலுமறை போற்றிடவே நாயகியாய் நிற்பவளே! மழலைச்சொல் சம்பந்தன் வாயூறத் தமிழ்பாட விழைவுடனே பொற்கிண்ணப் பாலேந்தி வந்தவளே! திருக்கடவூர்ப் பட்டனுக்குத் திங்கள் எழச் செய்தவளே! பெருங்கடலாம் பிறவியினில் பித்தேறி மூழ்கிவிட்ட மடமாந்தர் எங்களையும் கரைசேர்க்க வந்தவளே! படங்கொண்ட பாம்பணிந்து பராசக்தி ஆனவளே! மூவர்க்கும் தேவர்க்கும் எட்டா மறைப்பொருளே! யாவர்க்கும் அன்புவலைக் கெட்டும் விழுப்பொருளே 30 கொடியோர் தமைஒறுக்கக் காளியென வந்தவளே! நெடிதான துன்பங்கள் நீக்குகின்ற பேரருளே! அல்லல் பிறவிதனை அறுத்தெறிய வந்தவளே! மல்லல் வளமெல்லாம் வாரித் தருபவளே! ஆணவம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே! காணும் பொருளில் காட்சி அளிப்பவளே! காமம் அழிப்பவளே! காமாட்சி ஆனவளே! ஊமைக்கும் குருடர்க்கும் ஊனம் தவிர்ப்பவளே! முக்திநெறி அறியாமல் மூர்க்கரொடு முயல்வேமைப் பக்திநெறி அறிவித்துப் பாதத்தே சேர்ப்பவளே! 40 மருவத்தூர் வந்தவளே! மன்னுயிரைக் காப்பவளே! அருவாக உருவாக அருஉருவாய் ஆனவளே! காலன் வரும்போது கருத்தில் உதித்திடுவாய்! ஆலத்தை உண்டோன்தன் ஆகத்தில் உள்ளவளே! பொய்யான இவ்வாழ்வுப் புன்மை தவிர்த்திடுவாய்! மெய்யான நல்வீடு பேற்றை எமக்களிப்பாய்! ஆக்குவாய்! காப்பாய்! அழிப்பாய் கொடியவினை போக்குவான் வந்திட்ட பிறவிப் பிணிமருந்தே! என்றே பணிந்து வந்திப்பார் என்றென்றும் சென்றிடுவார் மேலாம் கதிக்கு. 50 கலைமகள் நீயே! அலைமகள் நீயே! அலைகடல் துயரில் தோணியும் நீயே! மலைமகள் நீயே! முதுமகள் நீயே! தலைமகள் நீயே! தாயும் நீயே! சங்கரி போற்றி! சாம்பவி போற்றி! வெங்கரி உரித்தோன் உளமே போற்றி! மற்றோர் பிறவி வாரா வண்ணம் தெற்றென வந்து காப்பாய் போற்றி! மருவத் தூரில் மாண்புடன் வந்து பெருமையும் புதுமையும் காட்டுவை போற்றி! 60 எருமைத் தலையன் மகிடா சுரனை பெருமை குலைத்த பெரியோள் போற்றி! ஐயன் தந்த அரைப்படி நெல்லால் வையத் தில்லறம் வளர்த்தாய் போற்றி! வயிரவி போற்றி; மாலினி போற்றி! பயிரவி போற்றி; பஞ்சமி போற்றி! தக்கன் மகளே; மீனவன் மகளே! தெற்குக் குமரித் தாயே போற்றி! கங்கைக் கரையும் காஞ்சித் தலமும் எங்கள் மதுரைத் தலமும் தில்லைத் 70 தலமும் திருவேற் காட்டுத் தலமும் இலகும் சமய புரமாம் தலமும் திருக்கடவூராம் தலமும் கொண்ட நீ மருவத் தூரும் தலமாய்க் கொண்டு கருத்தில் புதுமை காட்டுவை போற்றி! வருத்தும் தீவினை தணிப்பாய் போற்றி! விண்ணை அளந்தோம் மண்ணை அளந்தோம் எண்ணற் கியலாப் புதுமைகள் கண்டோம் விஞ்ஞானத்தால் புதுமைகள் செய்தோம் மெய்ஞ்ஞா னத்தை அறவே துறந்தோம்! 80 மானிட சாதி மயக்கங் கொண்டது, ஏனிடர் இன்னும் தீர்ந்திட வில்லை என்றே கலக்கம் கொண்டது தாயே! என்றும் நிலைக்கும் இன்பம் இழந்தோம் மங்கையர் இன்பம், மதுவில் இன்பம் பொங்கும் செல்வச் செழிப்பில் இன்பம் மின்னுவ தெல்லாம் பொன்எனக் கொண்டோம்; மின்மினி தன்னைக் கதிரவன் என்றோம்; பொங்கிடும் இன்பம் பெற்றிலம் என்றும்; மங்கிடும் இன்பமே மதித்தோம் தாயே! 90 விஞ்ஞானத்தால் மெய்ஞ்ஞானத்தை அஞ்ஞானம்மாய் அறியாது விட்டோம்; காமம் வெகுளி மயக்கம் என்னும் ஆம்இத் தீநோய் அணுகுவ எம்மை, கீதையும் குறளும் கற்றா லென்ன? பாதைகள் பலவும் புரிந்தா லென்ன? நோயும் நொடியும் வறுமையும் எம்மைப் பேயாய் நெருங்கப் பித்தர்கள் ஆனோம்; ஆடிக் காற்றில் அலையும் பஞ்சாய்; ஓடி இளைத்தே உருவம் திரிந்தோம்; 100 கானலை நீரெனக் கருதியே விட்டோம்! வேனலைக் குளிரென விரும்பியே இருந்தோம்; தாயே! தலைவி! அருளே சக்தி மாயப் பிறப்பின் மயக்கம் தெளியோம்; இன்னல் மிகுந்த பிறவியில் வீழ்ந்து கன்னல் மழலை மக்கள் மனைவி கிளையெனச் சுற்றம் பிறவும் பெற்று விளையும் துயரம் வரம்பில மூழ்கி நொந்தும் நைந்தும் வருந்தும் எங்கள் பந்தமும் பாசமும் பரிவுடன் போக்கி, 110 மேலாம் வீட்டை மாண்புறத் தந்து வேலாய்த் துளைக்கும் வறுமையை ஓட்டி, மாலாய் வருத்தும் மயக்கம் நீக்கி; ஆலாய்ப் பறக்கும் எங்களைக் காத்து, ஆரத் துய்க்கவுன் அருளைப் பொழிந்து, பாரம் போக்கப் பரிவுடன் வருக! அறப்பயிர் விளைத்திட அம்மை வருக! திறமுடன் வருக! திருவே வருக! கண்ணே வருக! மணியே வருக! விண்ணை விட்டிம் மண்ணே வருக! 120 பிள்ளைகள் நாங்கள் பிழைத்திட வருக! உள்ளங் குளிர உவந்தே வருக! பொல்லா நோய்களைப் போக்கிட வருக! எல்லா வளமும் ஈந்திட வருக! பிள்ளை அழுதிடப் பெற்றவள் இருப்பளோ! உள்ளம் கல்லோ? உமையே வருக! மண்ணில் மழையாய்ப் பொழிந்திட வருக! கண்முன் வருக! காரிகை வருக! பொல்லா வினையோம் புகழ்ந்திட அறியோம் எல்லார் வினைக்கும் மருந்திட வருக! 130 அம்மை வருக! அன்னை வருக! இம்மைப் பயன்தர இன்னே வருக! கிளியே வருக! கொம்பே வருக! ஒளியே வருக! உவப்புடன் வருக! பனிமால் இமயப் பிடியே வருக! முனிவை அகற்றி முன்னே வருக! தமிழே வருக! சுவையே வருக! அமிழ்தே வருக! அணங்கே வருக! குருபரன் பாடற்கு உளங்கனிந் தவளே உருவுடன் எம்முன் உவந்தே வருக! 140 தில்லை நடத்தில் திளைத்தனை போலும் ஒல்லையில் வாரா வண்ணம் வேலவன் நின்னை ஆங்கே நிறுத்தினன் போலும் அன்னை வருக! அழகே வருக! மருவத் தூரை மறவாய் வருக! உருவாய் வருக! ஒளியாய் வருக! தாயே வருக! தந்தையும் வருக! மாயவன் தங்காய் மகிழ்ந்திட வருக! அழுதோம் தொழுதோம் அன்னை வருக! விழைவுடன் அருள்பொழி மதியே வருகவே! 150 ஓம் சக்தி!

சக்தி திருப்பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் நீராட வம்மினோ நேரிழையீர் நாமெல்லாம் சீர்மல்கும் மருவத்தூர்த் தாயாவாள் சிலம்படியைச் சிறுசெந்நா வாற்பாடிச் சீர்மையெலாம் பெற்றிடவே ஊர்கின்ற செங்கதிரோன் உதிக்குமுனம் நாமெழுந்(து) உவப்புடனே நீராடி உயர்ந்தவளைப் போற்றிடவே பார்மல்கும் பாவையர்க்குப் பூத்துவந்த மாதமின்று பாங்குடனே வந்ததுகாண்! படர்ந் தேலோர் எம்பாவாய்! 1 கீழ்வானம் வெள்ளெனவே கிளர்ந்து படர்ந்ததுகாண் கிளையெல்லாம் புள்ளினங்கள் வாழ்த்தத் தொடங்கினகாண்! சூழ்கின்ற கதிர்வரவைச் சேவலினம் செப்பினகாண்! சுழன்றோடும் காலமகள் நாளென்று காட்டிநமை ஆழ்கின்ற துயிலெழுப்பி நங்கடமை உணர்த்து வள்காண்! ஆழாதீர் அருந்துயிலில் அருங்குணத்துப் பாவையர்காள்! மூழ்கிப் புனலெழுந்து மருவூராள் தாள்பணிய முன்னம் படர்ந்துவர முனைந்தேலோர் எம்பாவாய்! 2 பாரெல்லாம் மாந்தரினம் படர்ந்தே கிளைத்திடவும் பண்பான நல்லறங்கள் பாரில் செழித்திடவும் சீரெல்லாம் பொதிந்ததொரு தாய்மை விளக்கிடவும் சீரார்ந்த தாய்மையினில் தெய்வத்தைக் காட்டிடவும் ஏரார்ந்த கண்ணி எழில்மருவத் தூர்க்கன்னி எழிலான மங்கையராய் நம்மைப் படைத்தாள்காண்! பாரெல்லாம் படைக்க நமைப் பராசக்தி தான்படைத்த பேரருளின் திறம்பாடி உய்ந்தேலோர் எம்பாவாய்! 3 மூலப் பழம்பொருளை மூவர்க்கும் முன்னவளை முத்தமிழின் சுவையெல்லாம் தானொருங்கே பெற்றாளைக் காலக் கணக்கிற்கே கட்டுப் படாதாளைக் கருக்கோலம் கொண்டமுதல் நம்மையெலாம் காப்பாளைக் கோலக் குடியிருப்பாய்க் கவின் மருவூர் பூத்தாளை கொடிதான தீவினையாம் குன்றம் கரைப்பாளை ஏலக குழலாளை எழுந்து வந்து வாழ்த்தாமல் இன்னும் உறங்குதியோ? எழுந்தேலோர் எம்பாவாய்! 4 ஆளன் அருகிருக்க அணிமலர்ப்பூம் பள்ளியிலே அவனணிந்த தாரோடு நின்தாரும் தான்குழைய வாளன்ன கண்மடவாய்! அவன்மார்புத் துயில்பெற்று வார்கூந்தல் சோர்ந்திடவாய் வெளுப்ப விழிதாம் சிவக்க நீள்கின்ற நெடுங்கனவுச் சுவைகண்ட நற்றுயிலின் மீளாதே ஆழ்ந்தனையோ? மீனிகர்த்த விழியாளே! கேளாயோ எங்குரலைக் கேட்டேயும் எழுந்திலையோ? கொற்றவையாள் தாள்பணிய வாரேலோர் எம்பாவாய்! 5 கோல்வளையீர் நம்மையெலாம் கொள்ளை கொண்டகாதலரைக் கோலமண மன்றலிலே கூட்டுவிக்கும் தாயாளைச் சேல்விழியால் நம்மையெலாம் செம்மையுறக் காப்பாளைச் சுயம்பாக வந்தாளைச் சுடரொளியாய் நின்றாளை ஆலிலையான் தாமரையான் அழலேந்தும் பிறைமுடியான் அனைவோரைப் பெற்றாளை அணிமருவூர்ப் பூத்தாளைக் காலார வலம் வரவும் கையாரத் தொழுதிடவும் வாயாரப் போற்றிடவும் வாரேலோர் எம்பாவாய்! 6 ஆனைத்தோல் போர்த்துக் கரியின் உரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாளைக் கூனல் வெண் பிறைமுடித்த கொல்லேற்றான் பெற்றாளைக் குன்றேடுத்துக் கோக்கள்நிரை காத்தவனைக் காப்பாளை ஊனுயிரும் தந்து நமைப் படைப்பானைப் படைத்தாளை உயர்ந்தபரா சக்தியவள் தாள்பணிய வாராமல் மானே உறங்குதியோ? மடமயிலே நீள்துயிலின் மீண்டெழுந்து எம்முடனே போந்தேலோர் எம்பாவாய்! 7 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற மென்மலர்ப்பூம் பள்ளி தனிற்கிடந்து மைத்துனன் நின்னை மருவுகின்ற நற்கனவை மன்றல் வினைமுடித்து நனவாக்கிக் களிப்பதற்குக் கொத்துமலர்ப் பூங்குழலி! கோதைமரு வூராளைக் குறையிரந்து கேட்கவொரு வேளையொன்று வந்ததுகாண்! சத்தியவள் கால்பிடித்துன் மைத்துனனைக் கைப்பிடிக்கச் செந்தமிழின் சொல்லாளே! சேர்ந்தேலோர் எம்பாவாய்! 8 ஏடி இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ? எழிலான மருவத்தூர்த் தாயாவாள் தாள்வணங்கி மூடிக் கிடந்தவிருள் முன்கிழித்துச் செங்கதிரோன் முன்னிப் புறப்படுமுன் நாம்முன்ன வேண்டாவோ? கூடித் தொழுதற்கும் குரலெடுத்துப் பாடுதற்கும் கூனற் பிறைநுதலார் நின்முற்றம் குழுமினர்காண்! ஆடை திருத்தியினும் அருந்துயிலில் மீளாது ஆழ்ந்தவளே! அணிமயிலே! வாரேலோர் எம்பாவாய்! 9 வெள்ளிப் பனிமலையில் வீற்றிருந்து காப்பாளை விளங்கிடுமோர் கடலோரக் குமரியாய் நிற்பாளைக் கொள்ளையுறுந் தமிழுண்ணக் கூடலிலே உறைவாளைக் கூத்தனவன் ஆட்டமெலாம் தில்லையிலே காண்பாளை உள்ளங் குளிர்வித்தே உயர்காஞ்சி யமர்ந்தாளை உயர்கங்கைக் கரையோரம் கரைசேர்க்க நின்றாளை அள்ளி எடுத்துநமை ஆதரிக்க இம்மருவூர் அமைந்தபரா சக்திதனைப் பாடேலோர் எம்பாவாய்! 10 வீடுதனைப் பெறுகின்ற வாய்ப்பெல்லாம் வியனுலகில் வீற்றுள்ள ஆடவர்க்கே உரியதென மொழிந்திடுவார் வீடென்ற மணிவயிற்றில் ஆடவரைக் கருவிருத்தி விடுகின்ற தாய்க்குலத்துக் குயர்வீடும் இல்லையென்பார் வாடாத மலர்க்கோதை தான்சூடிப் பின்கொடுத்து வான்புகழ் சீர் அரங்கத்தான் வளமார்பத் துயில்பெற்றுச் சூடிக்கொடுத்தவொரு பெண் கொடியும் வீடுபெற்றாள் சுடர்க்கோதை நாச்சியளைப் போற்றேலோர் எம்பாவாய்! 11 மாமியீர்! உங்கள் மடமயிலைத் துயிலுணர்த்தி மீன் விழியார் நின்முற்றம்சூழ்ந்த நிலையுணர்த்தி ஓம் என்ற உயிர்ப்பான நற்பொருளைத் தானுணர்த்தி ஓதரிய அப்பொருளின் உட்பொருளைத் தானுணர்த்திச் சேமப் பொருளான சக்திதிறம் தானுணர்த்தி செங்கதிர்போல் மேனியளின் சிலம்படியின் சீருணர்த்தி ஏமந் தனைப்புணர்க்கும் எழில்மருவூர்த் தாயுணர்த்தி எம்மோடும் புனலாட உய்த்தேலோர் எம்பாவாய்! 12 அன்னைமா காளி அணிநிறம்போல் மெய்கறுத்தே அவள் சூலம் போல்மின்னி அவள் குரல்போல் நின்றதிர்ந்து முன்னியழும் அவளடியார் போல்நீரைத் தான்சுரந்து மும்மாரி பொழிந்திந்த வையமெலாம் காக்கவென மின்னலிடை மெல்லியலே! அன்னநடைத் தீங்குயிலே முன்னம் எழுந்துபுனல் குடைந்தாடி மருவத்தூர் அன்னைபரா சத்தியவள் அருள்வேண்ட வாராமல் இன்னம் உறங்குதியோ? எழுந்தேலோர் எம்பாவாய்! 13 கலியூழித் தீமையெலாம் கடிதகற்ற வந்தாளைக் கொடுவினையின் வெம்மையெலாம் குளிர்விழியால் தணிப்பாளைத் தலைவணங்கித் தொழுதிடவே தளிரடிகள் தருவாளைத் தெவிட்டாத தீந்தமிழின் சுவையென்ன நின்றாளை நிலைகுலைந்து தளர்போதில் நீள்கரத்தைத் தருவாளை நிலையான பேரின்பச் சுவைகாட்டி ஆள்வாளை சிலைநிகர்த்த புருவத்தாள் மருவத்தூர் மயிலாளின் செந்தண்மைத் திறம்பாட வாரேலோர் எம்பாவாய்! 14 ஆற்றூர் தனிலுறையும் அடியாளுக் கன்றோர் நாள் ஆராத தன்னருளைக் காட்டிடவோர் சிறுபெண்ணாய்ப் போற்றுகின்ற செவ்வுடையில் புதுக்கோலம் தனைக்காட்டிப் பாங்குடனே மற்றோர்நாள் பசும்பூர் அடியார்க்கு வீற்றுள்ள சுயம்பிலொரு சுடர்க்கோல முகங்காட்டி வீழ்கின்ற பிறவியெனும் கடல் மீளக் கரைகாட்டிக் கூற்றின்வாய் வீழ்கின்ற குவலயத்து மாந்தருக்குக் குறிக்கோளைக் காட்டுமவள் தொழுதேலோர் எம்பாவாய்! 15 வான்காட்டி வானுள்ள கதிர்காட்டி மதிகாட்டி வான்புயலைத் தான்காட்டி விண்மீன் குலங்காட்டி ஊன்காட்டி உயிர்காட்டி உற்றிணைந்த திறங்காட்டி மீன்காட்டும் கண்காட்டி நமைக்காக்கும் திறங்காட்டித் தான்தன்னைக் காட்டாதே தன்னருளைக் காட்டுகின்ற தாயாளை மருவூரின் சக்தியவள் நலம்பாடத் தேன்காட்டும் தமிழ்ச் சொல்லாள் நின்மகளின் துயில்காட்டித் தீந்தமிழர் குலமகளை எழுப்பேலோர் எம்பாவாய்! 16 சீரார் கலைமகளும் செல்வத் திருமகளும் போர்வெற்றி தருகின்ற கொற்றவையாம் பேர்மகளும் பாரோரைத் தாங்கிநலம் புணர்க்கின்ற நிலமகளும் பாரியங்க நன்னெறியில் உய்க்கின்ற அறமகளும் ஏரார்ந்த பெண்வடிவில் இலங்கிடுநல் தெய்வமெலாம் எங்கள் பரா சக்தியவள் எழில்வடிவே என்பவளே! தேரூர்ந்து வருகதிரோன் தினமெழுப்பு முன்னர்போய்த் தையல்மரு வூர்த்தாயைத் தொழுதேலோர் எம்பாவாய்! 17 மூல மறைக்கொழுந்தே! மூவர்க்கும் மூத்தவளே! மூதறிஞர்க் கெட்டாத முன்னைப் பழம்பொருளே! காலக் கணக்குக்கும் எட்டாத காரணமே! காசினியின் ஊடெங்கும் நிறைந்தபரா சக்தியளே! கோலமரு வூர்வந்து கொள்ளை கொண்ட பேரழகே! கோலேந்தி அண்டமெலாம் ஆளுகின்ற பெண்ணரசி! வேல்விழியே! என்றெல்லாம் சீர்பரவி நாம்தொழுதால் சக்தியவள் துணைபுரிவாள் போந்தேலோர் எம்பாவாய்! 18 சக்தியவள் சீர்மையெலாம் வாயூறத் தினமெல்லாம் தித்திக்கப் பேசிடுவாய் வந்துன் கடைதிறவாய்! பக்திமீ தூரநிதம் பேசியவப் பேச்செல்லாம் சித்தாடி உன்னையவள் ஆட்கொண்ட திறமெல்லாம் இத்தரையில் வந்துநமை ஆட்கொண்ட எளிமையெலாம் இன்றமிழில் பாடுதற்கு வந்தவொரு மார்கழியில் முத்திச் சுகமென்ன முழுத்துயிலில் வீழ்ந்தவளே! முனைப்பின்றிப் புனலாட வாரேலோர் எம்பாவாய் 19 பனிமலையில் புலிபொறித்த கரிகாலப் பெயரோனும் பத்தினிக்குக் கோயிலொன்று கட்டியவோர் குட்டுவனும் சினவேந்தர் பொருதழித்த நெடுஞ்செழியப் பாண்டியனும் செந்தமிழ்க்குச் சீர்மையெலாம் தந்ததொரு வள்ளுவனும் மனங்களிக்க நின்னுடைய மணிவயிற்றில் வாய்ப்பதற்கு மணவாளன் ஒருவனைநீ ஈந்தருள்க எனவெண்ணி முனைந்தாலே நின்னெஞ்சக் குறிப்புணர்ந்து குறைதீர்க்கும் முதல்விபரா சக்திதனைப் பாடேலோர் எம்பாவாய்! 20 சிந்தா மணிமனையோ? சீரடியார் நல்லுளமோ? சித்தர்களின் நெஞ்சகமோ? சேய்கள் தம் உள்ளகமோ? முந்திக் கனலெழுப்பி மூச்சடக்கும் யோகியர்தம் மூவிரண்டு நிலைக்களமோ? நவகோணத் துள்ளுறைவோ? வந்தித் துருகிடுநல் லரம்பையர்கள் போற்றுகின்ற வானகமோ? மண்ணகமோ? எங்கே இருப்பளெனச் சிந்தித் தவமே நின் காலத்தைப் போக்காமே சுடர்மருவூர்ச் சக்திபணிந் துய்ந்தேலோர் எம்பாவாய்! 21 ஓங்காரத் துட்பொருளை ஒளியான நற்பொருளை ஓதுமறைக் குள்ளே ஒளிந்துள்ள ஒண்பொருளை தீங்கின்றி ஞாலத்தைத் காக்கின்ற தீம்பொருளை தேவர்க்கும் தேடரிய தெவிட்டாச் சுவைப்பொருளை ஏங்கிக் குரலெடுத்தால் எழுந்தோடி வரும் பொருளை ஏமப் பெருவைப்பாய் இலங்குகின்ற வான்பொருளை ஓங்கியசீர் மருவத்தூர்ச் சக்தியெனும் விழுப்பொருளை ஒண்டமிழால் பாடத்துயில் மீண்டேலோர் எம்பாவாய்! 22 பொற்றாலி மங்கலநாண் போற்றும்வெண் காசுகளும் புற்றுறையும் பாம்புரியும் புத்தெலுமிச் சம்பழமும் கற்றோர் வியக்கவொரு பாம்புருவை வெள்ளியிலும் கவின்வேம்பின் இலையுதிர்த்துச் சித்தாலே மாற்றினளே பற்றில்லாப் பங்காரு நல்லுருவில் அன்றாடிப் பூரத்து நல்விழவில் புதுமையொடு வந்தனளே! பற்றாத தனைமாந்தர் பற்றுதற்குச் சித்தாடும் பராசக்தி பொன்னடிகள் பாடேலோர் எம்பாவாய் 23 அன்னைமா சக்தி! அணிமருவூர் வாழ்பவளே! உன்னையாம் எல்லாம் இன்றிரந்து கேட்பவெலாம் பொன்னல்ல! பொருளல்ல! பெரும்போகப் பேறல்ல பொன்றாத நின்னன்பும் வற்றாத நின்னருளும் குன்றாத நல்லறத்தில் தோய்ந்தவொரு நன்னெஞ்சும் கும்பிட்டு நின்றாளில் தோய்கின்ற பக்தியுமே! என்றென்றும் தந்துய்ப்பாய் எனக்கேட்டு மருவத்தூர் எய்ப்பில் வைப் பாவாளை ஏத்தேலோர் எம்பாவாய்! 24 போற்றிப் புகழ்ந்துன்னை நாவாரப் பாடுதற்கும் பைந்தமிழில் நின்சீர்மை போற்றும் திறமறியோம் நோற்கும் திறமறியோம்; நுண்ணறிவும் ஏதுமிலோம் நோகின்ற நெஞ்சோடு நின்னன்புக் கேங்கிடுவோம்! மாற்ற மனங்கழிய நின்ற மறையோளே! மாமருவூர் வந்தெம்மை ஈர்த்த கொலுவிருப்பே! போற்றி உனைப்பரவும் பக்தியினைத் தருகவெனப் பாவாய்நாம் சென்றிரக்கப் போந்தேலோர் எம்பாவாய்! 25 உதிக்கின்ற செங்கதிருக் கொவ்வா முகத்தழகை உச்சித் திலகமெனும் செஞ்சாந்துப் பொட்டழகை மதிக்கின்ற மாதுளையை வெல்லுகின்ற மெய்யழகை முத்திருக்கும் செம்பவளப் பெட்டகமாய்ப் பூத்திருக்கும் கதிகாட்டும் நன்முறுவல் பூத்த கலத்தழகைக் கரத்தேசெந் தாமரைமொட் டேந்தும் திறத்தழகை விதிமாற்றி வினைமாற்றி நமைமாற்றும் கண்ணழகை வியன்மருவூர்த் தாயழகைப் பாடேலோர் எம்பாவாய்! 26 எங்கள்பரா சக்தியவள் எழிலெல்லாம் போற்றுதற்குத் திங்கள் முகத்தழகுப் பெண்ணாய நம்மவருக்(கு) இங்குள்ள வாணாட்கள் போதா எனத்தினமும் பொங்கிக் களித்துப் புகழ்ந்தென்றும் சொல்பவளே! மங்குல் இனத்தொளிரும் மின்னேர் இடையாளே! மயில்குலங்கள் மொய்த்தவென நின்முற்றம் யாம்வந்தும் செங்கண் விழித்துயிலில் மீளாது தோய்ந்திருக்கும் கும்பகன் னன்மகளே! விரைந்தேலோர் எம்பாவாய்! 27 தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெயத் தீஞ்சுவைசேர் செந்நெலொடு செங்கரும்பு மிகவிளைந்தே ஓங்கிவளர் தென்னையொடு வான்கமுகு தானுயர்ந்து ஓம் சக்தி வாழ்கவெனும் வாழ்த்தொலியே வானுயர்ந்து வீங்கியுள மடிசுரந்து பொழிபசுவின் பால்நிறைந்து வீற்றுள்ள இல்லமெலாம் சக்தியருள் நிறைகவென ஏங்கித் தொழுதிந்த வையமெலாம் காக்கவென எழில்மருவூர்த் தாயாளை இரந்தேலோர் எம்பாவாய்! 28 முப்பத்து மூவர்களும் முன்னம்சென் றடைந்தார்காண்! முன்னுள்ள மூவர்களும் முனைந்தோடிச் சென்றார்காண்! செப்பரிய வான்மகளிர் குலமெல்லாம் சேர்ந்தனகாண்! செவ்வாடைத் தொண்டர்களும் இவர்க்கேமுன் போயினர் காண்! இப்புவியில் வாழ்சித்தர் கணங்கள் குழுமினகாண்! எல்லோரும் மருவூராள் எழிற்கோயில் ஓடினர்காண்! செப்பியநீ வாராமல் துயிலுக்காட் பட்டாயே! செந்தமிழர் குலமகளே! விரைந்தேலோர் எம்பாவாய்! 29 சீரடியார் பங்காரு சித்தர் திறம்பாடிச் சீற்றம் அகந்தையொடு முனைப்படங்கித் தொண்டாற்றும் பாருள்ள செவ்வாடைத் தொண்டர் திறம்பாடிப் பாங்கான மேல்மருவத் தூரின் நலம்பாடி ஈர்த்துநமை ஆள்கின்ற தாயாள் நலம்பாடி எழிலார் சிலம்படிகள் போற்றிக் குணம்பாடிக் கூர்த்தமெய்ஞ் ஞானத்துக் கெட்டாக் குணம்பாடிக் கூவித் தொழுதுய்ய வாரேலோர் எம்பாவாய்! 30 ஓம் சக்தி! - ஓம் சக்தி! - ஓம் சக்தி! - ஓம்! ஓம் சக்தி! - ஓம் சக்தி! - ஓம் சக்தி! - ஓம்! ஓம் சக்தி! - ஓம் சக்தி! - ஓம் சக்தி! - ஓம்! ஓம்! ஓம்! ஓம்!

ஓம் சக்தி வேண்டுதற் கூறு

மின்னும் புவிக்கெலாம் தண்ணென் துறைக்கெலாம் மிகநாடு கல்விக்கெலாம் மேல்வீடு தானாகிக் கால்நாடி நிற்பதும் மேவிடும் உன்தனருளே! கண்ணும் கருத்துமாய் எண்ணும் எழுத்துமாய்க் காசினி மலர்ந்த யாவும் காயாகிக் கனியாகிச் சாறாகிச் சுவையாகிக் காதல் சுரக்க வைப்பாய்; எண்ணங்கள் கோடி எழுந்தாடி உனை நாடி என்னைக் கடத்து என்றே இங்கோடி நான் வந்தேன் என்மீதில் அருள்நாடி எவ்விக் குதித்தோடி வா! என்னுளங் குடிகொண்ட கண்ணிளந் தென்றலே! இன்பக் கொடி மருந்தே! இறையரசி மருவத்தூர் எழிலரசி! அருளரசி! எனையாண்டு கொள்க, தாயே! மண்மீது விளையாடி கண்மீது கொலுவேறி மதிதலங் குளிர்ந்த தேவி! மலைமீது சிலைநாடி இலைமீது உறவாடி மணிமீது ஒளிதாவு நீ, என்மீது நினைவாடி பெண்மீது குணமாடி எழில்மீது கவிபாடி வா! இறையாகும் நிறைவாகிக் குறையாவும் மறைவாகி எனையாள எழுந்துவா நீ! பண்மீது கவிபாடி, பனிமீது கலைநாடி, பணைமீது களிதேடி, நீ! பதமாக நிதமாக அதுவாகப் பொதுவாகப் பரமாகும் நிறைதாயே, நீ! எண்மீது இயல்மீது எழுகாதல் நூல்மீது எனையாண்டு துணையாகு நீ! எதன்மீதும் உரமாகி இதழ்மீது உரையாகி எனைக்காக்க எழுந்துவா நீ! உள்ளக் கருத்தெலாம் உரைமீது கொட்டி நான் உதவாது என்று விட்டேன்; உண்மைக் கருத்தாங்கி உயர்வுக் கருத்தாக உயிரான பாவெடுத்தேன்; கள்ளப் புலன் தன்னைக் கட்டிக் கொடுசெலக் காணாமல் வழியிளைத்தேன்; கன்னியுன் வன்னியில் காலோடி மேல்வீட்டில் காலத்தை வெல்ல வந்தேன்! பள்ளப் பெரும்பாழிப் பாவியென் நெஞ்சத்தில் பருவத்தில் உருமாறி நீ, பனியாகத் தேனாகப் பரிவான மானாகப் பண்பெனும் உருவதாகத் தள்ளுக் கடங்காமல் தட்டிப் பறிக்குமனந் தடுமாறி வீழுமுன்னம் தலையான பருவத்தில் சரியான இளமையில் தளிர்நடை போட வைத்தாய்! இல்லை யெனக்கெனில் என்வாழ்வு பரவாழ்வு ஏத்துநல் வாழ்வதாமோ? இறைவிநீ என்கின்ற இப்பொருள் மெய்ப்பொருள் என்னநான் அறிவதெப்போ? கள்ளுக் குடந்தனில் தலைவிடுத் தார்போலக் கவலைகள் தொட்டுவந்தேன்; கலையூறிக் களையாறிக் கன்னியுன் சொல்லாலே காலத்தை வெல்ல வேண்டும்; புள்ளு முறங்கிடும் நல்ல நடுநிசி புறப்பட்டு வரவும் வைத்தாய் புலமையை வீசிநான் நிலைமையைப் பேசினேன் பொங்குமுன் அருள்தருகவே; புள்ளிக் கருங்குயில் பொங்கிக் களித்திடும் புலமையில் பாடவைக்கும் புதுவாழ்வு தனில்வாழ மருவத்தூர் தனில்மேவும் பூந்தேவி அருள்செய்குவாய்! செல்வக் குடியெலாம் செத்துக் கருகாத செம்மையைக் கண்டதேபோல் செல்வ வரம்பினில் செல்லும் வரம்பாகச் சிந்தை தளிர்க்கின்றதே! கொல்லும் கவலையால் குடல்க ளறுபடக் குந்தி யிருக்கையிலே கொட்டி விழியாலே கட்டிப் பழித்தெமைக் குறைகள் படுத்துகின்றார்; வெல்லுந் திறமெலாம் வீணை யெனும்சொலால் விரித்துக் கொடுத்துவிட்டாய்; வீதியின் பாதியில் சேதி யறியாமல் வீணாகிப் போகலாமோ? சொல்லுக் கடங்காத சூட்சப் பொருளினைச் சொல்லிக் கொடுத்துவிட்டாய்; வில்லுக் கடங்காத வீணர்தம் ஆணவம் வித்தை விரிக்குதம்மா! பத்தினி வாயாலே ஒத்த ஒலிக்குரல் பாரெலாங் கேட்பதேபோல் பட்டிதொட்டி யெங்குங் கிட்டிமுட்டி யுன்றன் பாங்கினைப் பேசுதம்மா! விற்றுவிட் டவருஞ் சொத்து கெட்டவரும்! விடிய வருகின்றார்! வீடு நிலங்காணி தேடும் பொருள் யாவும் கூடிட வந்து நிற்பார்; சித்தந் தெளிந்திட வைத்தே அவர்களைச் செய்திகள் சொல்லுகின்றாய்; செப்பிடு வித்தைகள் போல அறிவதோ சித்தி அளிப்பவளே? பத்துங் கலையாமல் சித்தங் குலையாமல் பண்பில் நிறுத்திவிடு! பக்தி செயுமாந்தர் நித்தங் குழுமரு வத்தூர் வாழ்பவளே! கண்ணுக்கும் உள்நின்று புண்ணுக்கு மருந்தாகக் காட்சிதந் தென்னை யாண்டு காலத்தின் கோலத்தை ஞானத்தின் பாலத்தில் காணவும் வைத்து விட்டாய்! என்னுக்குள் நீநின்று இதயத்தைத் தான்கண்டு என்தனை ஆள வந்தாய்! இயற்கைக்குள் நானின்றி முயற்சிப் பிடிப்பின்றி ஏமாந்து போக லாமோ? உன்னுக்குள் நானின்று ஓங்காரந் தானுண்டு உண்மை அறிவ தெப்போ? ஊருக்கும் பேருக்கும் யாருக்கும் இல்லைநான் உனக்காக வந்த வன்தான்! மண்ணுக்குள் வாழ்ந்திடும் மற்றை மனிதர்போல் மரிக்கநான் எண்ண வில்லை! மனம் நின்று படிகின்ற மருவத்தூர் தனில்நின்று மலர்ந்த பெருவாழ்வே! ஒரு மொழியில் திருமொழியைக் குருமொழியாய்த் தந்தாய் நீ உதறிவிட மனமும் இல்லை! ஓங்காரத் தத்துவம் தாங்கி நீ வருவதை உணர்வாக அறிய வேண்டும்! ஒருவாறு 'பரஞ்சோதி' ஒளிக்குலம் தழுவிநான் உறவாடி நிற்க வேண்டும்; உள்ளக் கரும்பாலை வெள்ளத் தனிச்சாற்றை உறிஞ்சிநான் குடிக்க வேண்டி அறிவாரும் ஆனந்தப் பெருவாழ்வின் உத்தமர் அண்டிநான் வாழவேண்டும்; அணைநின்ற புனலாக அன்பாக எனையாண்டு அணைவதும் நீத மன்றோ? பிறிதாருஞ் சொல்லாத பரவாழ்வின் வடகரைப் பாங்கான சித்தமார்க்கம் பளபளவென் றெனையணைய முடுகிநடை யொடுகிசெலப் பக்குவந் தருக தேவி! கருவினில் உருநின்ற காட்சியைப் போலவே கருத்திலே அமர்ந்த உன்னைக் காசென்றும் பணமென்றும் வீசென்றும் ஏதொன்றும் காட்டாமல் கண்டு கொண்டேன்; மறுபிறவி தனில்நின்றேன்; மதியொளியில் நீந்தினேன் மனவாக்குந் தான்கடப்பேன்; மண்ணிலே விண்ணிலே என்னிலே உன்னிலை மறித்துநான் அறியவேண்டும்; குருவாக நீவந்து வரமாகத் தான் தந்து கோதைநீ ஆளவேண்டும்; கொழுந்தான ஞானமே! எழுந்தாளும் மோனமே! குறையெலாம் போக்க வேண்டும்; திருவடியில் உயிர்வைத்துத் திசைவடிவில் நானுந்தச் செய்பவள் நீயல்லவோ! திருவளருங் கருவரசி மருவத்தூர் குருவரசி செந்தமிழ் காக்க வருக! இன்னமும் என்மனம் கொல்லனின் கூடமாய் எவ்விக் கொதிக்குதம்மா! இளமனத் தென்றலே! குணமலர்க் குன்றமே! எளியனை ஆள்கதேவி; கன்னலும் பின்னிடும் களிமயில் ஆடிடும் கவிபுகழ் மருவூரிலே கண்மலர் தெய்வமே! கறையிலாச் செல்வமே! கண்வைத் தெனைக்காக்கவே! என்மனம் உள்ளதை உன்மனங் கண்டிடும் எந்தனை வாழவைப்பாய்! இன்பக் கொடியே! எழுச்சிப் பிடியே! எந்தனைக் காக்க, தேவி! புண்மனந் தன்னிலே புலமையை வைத்துநான் போற்றியே வாழ்த்துகின்றேன்! போற்றுநல் உள்ளமே! ஏத்துநற் செல்வமே! பொறுத்தெனை ஆள்க, தேவி! குன்ற மறைந்த கொழுந்தே வருக! கோகிலமே வருக! கொண்டுனை எண்டிசை கண்டுணர் கின்றவர் குறையறவே வருக! மன்ற மணந்த மறையே வருக! மருவரசி வருக! மண்ணினில் நின்றவர் கண்டவர் விண்டிலர் மனமிரங்கி வருக! கன்று மறைந்த கனியே வருக! கலையே வருகவே! கண்களி உண்டிட விண்டலம் நின்றிட கார்முகிலாய் வருக! நின்று மலர்ந்த நினைவே வருக! நித்திலமே வருக! நெஞ்ச மலர்ந்தவர் கொஞ்சி மகிழ்ந்திடும் நிறையறிவே வருகவே!

ஆதிபராசக்தி கவசம்

விநாயகர் காப்பு மூலப் பழம்பொருளே! முத்தமிழாள் ரத்தினமே! சாலக் கவசம்நீ கா. ஆதிபராசக்திக் காப்பு பச்சையாம் நிறமே பேணிப் பசுமையாய் எண்ணங் காத்தே இச்சையால் உலகை யாண்டிங் கெந்நாளுங் காக்க வென்றே நிச்சயக் கவசஞ் செய்தேன் நேரமும் உன்றன் அன்புப் பிச்சைக்கே ஏங்கு கின்றேன் பெருமாட்டி! கவசங் காக்க!

நூல்

அருள்மிகுந்த மருவத் தூரின் ஆதிபரா சக்தி தாயே! உரந்தந்து காக்குந் தேவி! ஓங்காரி சுயம்பே அம்மா! வரந்தந்து என்னை யாள வண்டமிழ்க் கவசஞ் சொன்னேன் கரந்தென்றும் பாம்பாய்க் காக்கும் சக்தியே சிரத்தைக் காக்க! 1 ஆதியாய் உள்ள அன்னை அகலிரு நுதலைக் காக்க! சோதியாய்ச் சுடருங் கன்னி துணைவிழி தமையே காக்க! பாதத்தைத் தளிராய் ஆண்டாள் கூர்நாசி தன்னைக் காக்க! போதத்தைத் தந்த தேவி புகழிரு செவியைக் காக்க! 2 இன்னருட் சுயம்பாம் நங்கை எனக்குள வாயைக் காக்க! கொன்றையந் தளிராள் நாவைக் கோத்திடும் பல்லைக் காக்க! அன்றைநாள் தொடங்கி நாளும் அருள்வாக் களிக்குந் தேவி என்றுமே கதுப்பைக் காக்க! எழிற்கண்டந் தன்னைக் காக்க! 3 ஈசனை யாண்ட தேவி என்தோளை விலாவைக் காக்க! தேசிக மருவூர் வல்லி மாசிலா மார்பைக் காக்க! பேசுநற் புகழாள் நின்றே பெரும்வயி றதனைக் காக்க! ஆசிலாச் சுயம்பாள் முன்கை ஆர்வமாய்ப் பின்கை காக்க! 4 உமையெனும் நல்லாள் அங்கை உவந்துமே நாளுங் காக்க! இமையோரும் ஏத்துஞ் செல்வி என்புறங் கைகள் காக்க! அமையாரும் தோளி என்றன் ஆர்ந்திடும் விரல்கள் காக்க! எமையாளும் வேம்பின் வல்லி எவ்வியென் நகங்கள் காக்க! 5 ஊர்தொறும் போற்றுந் தேவி உந்தியை நந்திக் காக்க! சீர்பெறும் சத்தி தேவி நற்குறி தன்னைக் காக்க! வேர்விடும் வெள்வேல் நங்கை விரும்பியே குதத்தைக் காக்க! கூர்விழி மருவூர்க் கோதை முதுகொடும் இடுப்பைக் காக்க! 6 எழில்தரும் மருவத் தூராள் என்சகம் இரண்டைக் காக்க! பொழில்தரும் நலத்தின் அன்னை பொருந்துநல் தொடையைக் காக்க! அழிதரும் துன்பம் போக்கும் ஆதியாம் சத்தி தேவி! முழங்காலை முனைந்தே காக்க! மூத்தாளே முட்டி காக்க! 7 ஏகமாய் அநேக மாகி எங்குலத் தாயே யானாள் வேகமாய்க் கணைக்கால் காக்க! விரும்பியே பரடு காக்க! பாகமாங் குதிகால் தன்னைப் பராசக்தி துணிந்தே காக்க! யோகமே ஆளுந் தேவி உவந்துநீ பாதங் காக்க! 8 ஐயனுக் கருளும் வல்லி ஆருயிர் மருவூர்ச் சக்தி! பையவே பாதங் கவ்வும் பத்தான விரல்கள் காக்க! தையலே உடலம் எல்லாம் தயையொடுங் காக்க! காக்க! மையலை அவிக்குந் தேவி மனம்வைத்தே நெஞ்சைக் காக்க! 9 ஒளியொடும் பிறந்த தேவி! ஓங்காரி! பூதம் பேயை வெளியிலே காட்டில் நின்றே வெருட்டிடும் ஆவி தன்னைக் கிலியெழ யாளி ஊர்வாய்க் கிழமையாய் நின்றே காக்க! வலியெனும் மந்திர மாயம் மயக்கிடும் எந்திரங் காக்க! 10 ஓம் சக்தி! தந்தி ரங்கள் ஓடோடிப் போகக் காக்க! தீம்புகள் பகைவர் செய்யத் திரண்டுமே வாள்வேல் ஈட்டி தாம்புகள் பலவுங் கொண்டே சழக்குகள் செய்வா ராயின் காம்புள சூலம் ஏந்திக் காளிநீ காக்க! காக்க! 11 ஔடதப் பகையே போல அற்பர்கள் பகையைக் கொண்டே சௌரியம் அழிக்க வேண்டித் தகடுகள் பில்லி சூன்யம் வௌவியே படியைக் கட்டி வாட்டவே எண்ணும் போதும் கௌரியே காக்க! காக்க! காலமுந் துணையாய்க் காக்க! 12 கண்ணிலே விரலை விட்டே காலமுந் துன்பஞ் செய்வார் எண்ணிய எண்ணங் கூடா வண்ணம்நீ மாரி காக்க! புண்ணிலே வேலை யூன்றிப் பொழுதுமே செய்வார் உள்ளார்; கண்ணீரை எம்பால் மாற்றிக் காலமுந் தேவி காக்க 13 காளியே மருவூர்ச் சக்தி கவலைகள் அச்சம் எல்லாம் தூளியில் தூங்குஞ் சேய்போல் தூரம்போய்த் தூங்கக் காக்க! மாலியே கொடுமை தீமை மனமுறை பிணிகள் எல்லாம் நீலியே வாரா வண்ணம் நிமிடமுங் காக்க! காக்க! 14 கிட்டிய விலங்கின் துன்பம் கிடத்திடும் பாம்பின் துன்பம் விட்டிடா நோய்கள் துன்பம் வெருட்டிடுங் கோள்கள் துன்பம் மட்டிலா மனையின் துன்பம் மதியிலா மாற்றார் துன்பம் பட்டிடும் பாரின் துன்பம் பராசக்தி வராமற் காக்க! 15 கீல்வாய்வு முட்டி வீக்கம் இளம்பிள்ளை வாதம் மூலம் கால்கடுப்பு மண்டை வெட்டு மூக்கினிலே இரத்தஞ் சொட்டல் பால்நோய்கள் குமட்டல் வாந்தி பக்கவாதம் மலடே கண்ணோய் பால்வடிந்து வேம்பின் மூலம் புகழ்பெற்றோய் வராமல் காக்க! 16 குடலிறக்கம் மதுவாம் மேகம் குலைநோய்கள் இரத்த ழுத்தம் படமெலிந்த காசம் வெட்டை பெருநோயே படைகி ரந்தி விடநோய்கள் வெடிப்பே ஊரல் விதைவாய்வு பாண்டே யின்றி நடமாடி மருவூர் நின்றே நலஞ்செய்யும் சக்தி காக்க! 17 கூவியழு கின்ற போதில் கடப்பமலர் கன்னி காக்க! ஆவிசோர்ந்து நிற்கும் காலை ஆதிபரா சக்தி காக்க! நாவடங்கி விழிகள் ஏறி நாற்புறமும் மக்கள் சூழத் தேவிநின் மருவூர் எண்ணம் திரையாமல் தாயே காக்க! 18 கெடுதியெலாம் வராமற் காக்க! சடுதியெனை யருளிக் காக்க! அடுத்தூரும் வினைகள் யாவும் அண்டாமல் தேவி காக்க! நெடிதுயருங் கவலை எல்லாம் நீங்கிடவே காக்க! காக்க! நடம்பயிலும் மருவூர் வல்லி நற்றமிழின் எண்ணங் காக்க! 19 கேட்பாரும் இல்லை காக்க! கிளைஞர்களும் தொல்லை காக்க! ஆட்கொண்ட சுயம்பின் தேவி அண்டியவர் பகையே காக்க! பாட்டோடு பொருளும் ஆன பராசக்தி மருவூர்ச் செல்வி! நீட்டோலை யாகி நின்றேன் நிகழ்ச்சியோலை யாகக் காக்க! 20 கையோடு சூலம் ஏந்திக் காலோடிக் கடிதே காக்க! ஐயோடு வருந்தும் போதில் ஆர்வத்தோ டணைத்தே காக்க! பையோடு பாம்பா யூர்ந்தே பாவியைப் பழியே வாங்கும் கையேடு நீயே யன்றோ! காலனைக் காக்க! காக்க! 21 கொட்டியழ கெரிக்குந் தேவி குடதிசையில் வந்தே காக்க! கட்டவிழுங் கூந்தற் செல்வி குணதிசையில் அமர்ந்தே காக்க! மொட்டேந்தும் மோனக் கன்னி வடதிசையில் வந்தே காக்க! கட்டிக்கரும் பான சக்தி தென்திசையில் இருந்தே காக்க 22 கோவையிதழ் மாது ளத்தாள் ஆக்கினியில் ஆர்ந்தே காக்க! பாவைத்தால் அருளும் அன்னை வாயுதிசை வரிந்தே காக்க! நாவைத்த மருவூர் நங்கை நிருதிதிசை மலர்ந்தே காக்க! பூவைத்த பூவைக் கன்னி ஈசான்யம் இழைந்தே காக்க! 23 கோயிலிலே சுயம்பே யான கோமதித்தாய் முன்பின் காக்க! வாயினிக்கும் சக்தி யான வைரவியாள் பக்கம் காக்க! தாயான மருவத் தூராள் தயாபரியாள் மேலே காக்க! காயான மனமே கொல்லும் கண்ணகியாள் கீழே காக்க! 24 கௌத்துவம் அணிந்த தேவி கௌரியென் வளங்கள் காக்க! சைத்திரிகன் அறியாப் பாவை சங்கரியாள் உயர்வைக் காக்க! தைத்திங்கள் பூசம் ஆளும் தாரணியாள் உணர்வைக் காக்க மைத்தடத்தின் கண்ணி யானாள் மருவூராள் அறிவைக் காக்க! 25 வயிற்றுவலி பேதி வாய்வும் வாய்நோய்கள் புற்றுந் தீர்த்தே பயிர்நோய்போல் பாழ்ப டுத்தும் பறங்கியொடு சொறிசி ரங்கும் உயிர்போக்கும் நெஞ்ச டைப்பும் உன்மத்தம் வலிபி டிப்பும் அயர்வூட்டுந் தொற்று நோய்கள் அனற்செல்வி வராமற் காக்க! 26 வாதமொடு சூலை சன்னி வாட்டுகிற இருமல் வெப்புச் சூதமொடு சளியே மூலம் சுரநோய்கள் என்பு ருக்கிப் பாதநட மின்றிச் செய்யும் படுக்கைநோய் பித்தம் யாவும் நீதமொடு மொட்டின் வல்லி நேராமற் காக்க! காக்க! 27 விடப்பணிகள் எருமை ஓநாய் வனவிலங்கு யானை சிங்கம் கொடும்புலிகள் கரடி நாய்கள் முட்பன்றி காண்டா மிருகம் நடுங்கச்செய் முதலை திருக்கை நலிவூட்டுந் திமிங்கி லங்கள் ஒடுங்கச்செய் வேளா தேளி உயிருண்ணுஞ் சுறாவி னங்கள் 28 வீட்டிலுள்ள எலிகள் பூனை விடமுள்ள தேள்கள் பூரான் மாட்டியிடர் விளைக்கும் பூச்சி மரவெட்டை சிலந்தி பல்லி நாட்டிலுள்ள ஓணான் அரணை நச்சினங்கள் குளவி செய்யான் காட்டுகின்ற துன்ப மெல்லாம் கன்னியுன்றன் அருளாற் காக்க! 29 வெறுப்புணர்வு சலிப்பே சோர்வு வறுமைநோய் மனக்க லக்கம் நரம்பினிலே தளர்ச்சி சோம்பல் நலிவுறுத்தும் பலவாந் துன்பம் வருத்துகின்ற உளத்தின் ஏக்கம் வாட்டாமல் தினமும் என்னைப் பரந்தாமி சக்தி காக்க! படுந்துன்பம் வராமற் காக்க! 30 ஒளியேந்தும் விழியே சக்தி! ஓங்காரப் பிரண வத்தி கிலியேந்தி வாழா வண்ணம் கிட்டியெனை யருளாற் காக்க புலிபோல வீரம் பேணிப் பொருந்தியே வாழக் காக்க! நலிவின்றி யுலகங் காக்க! நல்லதோர் கவசங் காக்கவே! 31 கவசத்தின் கவசம் துன்பங்கள் இன்றிக் கவசம் - வந்த துயரங்கள் போகக் கவசம் - வரும் இன்னல்கள் நீங்கக் கவசம் - சக்தி நீ இன்பங்கள் காக்கக் கவசமே!+

Explore More Spiritual Wisdom

Visit other sections to deepen your spiritual understanding