Thai Poosam Festival 2016

Category : Festivals Published : 2016-01-23 11:41:25

This year, the most auspicious Thai Poosam festival was gracefully celebrated with the gracious and august presence of Amma on the 23rd and 24th of February, 2016. The decorations at the Siddhar Peedam and the front corridors were highly heart-warming and eye soothing. The devotees thronged the occasion in huge numbers and the number assembled to witness the lightning of Jothi by her grace - Amma -was an all-time high.

Exclusive live telecasts of the occasion were beamed across almost all the Southern states. We had Podhigai from Tamilnadu, Chandhana from Karnataka, Sapthagiri from Andhra Pradesh and many other Hindi channels vying for space to telecast the vibrant occasion live. Many Hindi channels had also covered the important event of Thai Poosam at Melmaruvathur.

Expecting the gracious presence of Amma by 7.30 am on Jan. 24th, 2016, a serpentine queue had been building up from 6 am onwards. The entire crew of Siddhar Peedam along with the administrators from Erode was eagerly waiting to perform Paadha Abhishekam on the sanctified feet of Amma. The Holy Amma, who made her Holy Presence felt around 10:00 am, lit camphor and performed the rituals and other noble formalities to the Sanctum Sanctorum, to the Sannidhis and to the other Gopurams.

Young school children of the Adhi Parasakthi School gave a wonderful feast to the eyes and heart of the assembled people by performing a dance event, depicting the ideals and principles spread to the world by Amma. The gathered masses/people finally departed, leaving their hearts behind at Melmaruvathur, after getting their most sought-after dharshan and the graceful blessings of Her divine – The Amma.


இந்த ஆண்டு தைப்பூச ஜோதிப் பெருவிழா கடந்த ஜனவரி 23, 24 தேதிகளில் மிகுந்த உற்சாகத்துடன் சித்தர்பீடத்தில் கொண்டாடப்பட்டது. தைப்பூச ஜோதி வளாகத்தில் ஆன்மிககுரு அருள் திரு அம்மா அவர்கள்  24ம் தேதி ஞாயிறு மாலை 6.30 மணி அளவில் தைப்பூச ஜோதி ஏற்றிய வைபவத்தை இலட்சம் பக்தர்களுக்கு மேல் நேரில் கண்டுகளித்தனர். மேலும் பல கோடி அம்மாவின் பக்தர்கள் கண்டு களிக்க வசதியாக தூர்தர்ஷன் நிறுவனம் தமிழ் (பொதிகை), கன்னடா (சந்தனா), தெலுங்கு (சப்தகிரி) மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பியது. உலகெங்கிலும் உள்ள பக்தர்கள்  இணையதளத்திலும் (www.omsakthi.info) நேரலையாக இந்நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.

விழாவைப் பொறுப்பேற்றுச் செய்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் ஈரோடு மாவட்டக் கிளை, முகப்பு அலங்காரம் முதல் சித்தர்பீட உள் அலங்காரங்கள் வரை, அனைத்துப் பகுதிகளிலும் பசுமையான கீற்றுக்களால் மிகச் சிறப்பாக அலங்கரித்திருந்தனர். விழாவின் முதல் நாளாகிய 23ம் தேதி தைப்பூச சக்திமாலை இருமுடி விழாவின் நிறைவு நாளாகவும் இருந்ததால், பக்தர்கள் கூட்டம் மிகமிக அதிகமாக இருந்தது. பல ஆண்டுகளாக அம்மா அவர்களிடம் பக்தி கொண்ட பக்தர் கூட்டம் இந்த ஆண்டு மிகவும் அதிகமாக இருந்ததை பெரும்பாலான பக்தர்கள் இருமுடிக் காலத்தில் சக்தி மாலை அணியும்போது அணியும் மஞ்சள் உடையில் இருந்ததைக் கொண்டு நாம் அறிந்தோம். அன்று விடியற்காலை மங்கல இசையுடன் விழா துவங்கியது. காலை 10.40 மணி அளவில் அம்மா அவர்கள் சித்தர்பீடம் எழுந்தருளிய பொழுது, அவர்களுக்கு பாதபூசை செய்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அன்று மாலை நடைபெறும் கலச, விளக்கு, வேள்வி பூசைக்கான பணிகளில் வேள்விக் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். புற்றுமண்டபத்தின் முன்புறமாக உள்ள மண்டபத்தில் குரு கலசமும், குரு யாககுண்டமும், பிரதானச் சக்கரமும், யாககுண்டமும், அழகுற அமைக்கப்பட்டிருந்தன. இது தவிரவும் கன்னிகோவில் சன்னதியின் அருகிலும், ஈசான்ய மூலை பிரகாரத்திலும் கூட சக்கரங்களும், யாக குண்டங்களும் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 4.00 மணி அளவில் நடைபெற்ற தங்கத் தேரோட்டத்தைத் தொடர்ந்து, 4.45 மணி அளவில் கலச, விளக்கு, வேள்வி பூசையை திருமதி அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்கள் .வேள்வி நிறைவில் 6 மணி அளவில் வேள்வியில் வைக்கப்பட்ட புனித கலச நீரைக் கொண்டு சுயம்பு அன்னைக்கு அபிடேகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து ஆன்மிக மண்டபத்தில் இரவு 7.30 மணி முதல் இரவு 10 மணிவரை திண்டுக்கல் ‘அங்கிங்கு’ இன்னிசைக் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.

24.1.2016
24ம் தேதி ஞாயிறன்று காலை 7.30 மணிக்கு அம்மா அவர்கள் சித்தர் பீடத்திற்கு எழுந்தருள உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பில் காலை 6 மணி முதலே பிரகாரத்தின் வெளிப் பகுதிகளில் அம்மாவின் பக்தர்கள் ஆவலோடு காத்திருக்கத் துவங்கினர். கருவறையின் எதிரே பிரகாரத்தில் பாதபூஜையுடன் கூடிய வரவேற்பை நல்குவதற்கு 7 மணி முதல் சித்தர்பீட வேள்விக் குழுவும், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளும் தயார் நிலையில் காத்திருந்தனர். ஓம்சக்தி மேடை அருகே ஜெண்டை வாத்தியக் குழுவினரின் இசை முழங்கிக் கொண்டிருந்தது. சித்தர் பீடத்தின் உள்ளே நாதஸ்வரம், மேளம் முழங்க அந்த இடத்தை மகிழ்ச்சி அலைகள் இரம்மியமாக நிறைத்திருந்தன.

வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தோர் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைவு பெற, அம்மா அவர்கள் திருமதி அம்மா அவர்களும், சக்தி திருமதி ஸ்ரீதேவி ரமேஷ் அவர்களும் பின் தொடர காலை 9.30 மணிக்கு பீடத்திற்கு எழுந்தருளினார்கள் . பீடத்தின் மேல்தளத்தில் பல ஆண்டுகளாக வழக்கமாக ஏற்றப்பட்டு வரும் ‘தைப்பூச ஆன்மிக ஜோதி’ ஏற்றப்படும் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சித்தர்பீட மகளிர் அணி மற்றும் வேள்விக் குழுவினரால் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.

ஆன்மிக குருவின் திரு உருவப் படமும், அருகே ஆதிபராசக்தி அம்மன் சிலையும், இருபுறமும் பாவை விளக்குகளும் அந்த இடத்தை ஆன்மிக ஒளிக்கதிர்கள் ஆக்ரமித்த ஒரு உணர்வை ஏற்படுத்தின. அந்த அமைப்பின் முன்புறமாக மூன்று அகண்ட தீபங்கள் பெருந்திரிகளுடன் ஏற்றத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.காலை 10 மணிக்கு அங்கு எழுந்தருளிய அம்மா, அந்த அமைப்பிற்கு கற்பூர தீபாராதனை காட்டியபின் மேலிருந்தபடியே கருவறை, புற்றுமண்டப சன்னதிகளுக்கும், கோபுரங்களுக்கும் தீபாராதனை காட்டினார்கள் . தொடர்ந்து 10.05 மணிக்கு மூன்று அகண்ட தீபங்களிலும் “தைப்பூச ஆன்மிக ஜோதி” ஏற்றி வைத்து மீண்டும் தீபாராதனை காட்டினார்கள் .

தொடர்ந்து அம்மாவே ஒரு தேங்காயில் கற்பூரம் ஏற்றி அந்த ஜோதிகளுக்கும், தம் திருப்பார்வையை செலுத்தி தம்மைத்தாமே வலமாகச் சுற்றி வந்து, தம் திருக் கரங்களாலேயே அந்தத் தேங்காயை சிதறுகாய் அடித்து திருஷ்டி எடுத்தார்கள் . திருமதி அம்மா அவர்கள் அந்த மூன்று ஜோதிகளுக்கும் தீபாராதனை காட்ட, “ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா!” எனும் சரண வாழ்த்தொலிகள் அந்த இடத்தை நிறைத்தன.

அந்த மூன்று ஆன்மிக ஜோதிகளையும் திருமதி அம்மா, திரு. வீரராகவன், கருவறைத் தொண்டர் திரு. நடராஜ பூபதி மூவரும் முறையே கருவறை கோபுரம், புற்றுமண்டப கோபுரம், கன்னிகோவில் சன்னதியின் பின்புறம் உள்ள கோபுர உச்சிகளில் நிலை நிறுத்தினார்கள் .

தொடர்ந்து அம்மா உத்தரவுப்படி பல்வேறு முறைப்படி அங்கே திருஷ்டிகள் எடுக்கப்பட்டன. சுமார் 10.30 மணி அளவில் அம்மா கீழே இறங்கி, அருட்கூடத்திற்கு எழுந்தருளினார்கள் . மேலே ஏற்றப்பட்ட இந்த தைப்பூச ஆன்மிக ஜோதிகளை பக்தர்கள் வாய்ப்பான கீழ்த்தள இடங்களிலிருந்து வணங்கினர். நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்களும் இந்த ஜோதிகளைக் கண்டு வணங்கியபடியே சென்றதை நாம் காண முடிந்தது.

அடுத்து அனைவருடைய பார்வையும் செயலும் சித்தர்பீடத்தின் பின்புறம் உள்ள ‘தைப்பூச ஜோதி வளாகத்தின்’ மீதும் அருள் திரு அம்மா அவர்களின் இல்லத்தின் முன்புறமும் திரும்பின. அம்மா அவர்களின் இல்லத்தின் முன்புறமாக ‘குருஜோதி’ ஏற்றப்படும் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஜோதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நாடுகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் தங்கள் வரிசை இடத்தை நிர்ணயம் செய்து கொண்டு, தாங்கள் அழைத்து வந்திருந்த கலைக்குழுவினர் நடத்திய நிகழ்ச்சிகளால் பக்தர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர்.தைப்பூச ஜோதி வளாகத்தில் உள்ள மேடை, திடல் அனைத்துமே சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. திடலில் பஞ்சபூத வழிபாடு அமைப்பொன்று இந்த ஆண்டு புதுமையாக அமைக்கப்பட்டிருந்தது.

அம்மா இல்லத்தின் முன்:
சரியாக 4.15 மணிக்கு திருமதி அம்மா அவர்கள் கோபூசை செய்து விழாவைத் துவக்கி வைத்தார்கள் . 4.25 மணிக்கு குரு ஜோதியை ஏற்றி வைத்தார்கள் . திருமதி அம்மாவும், சக்தி திரு. கோ.ப. அன்பழகன் அவர்களும், குரு ஜோதிக்கு தீபாராதனை காட்டினர்.

தொடர்ந்து ஜோதியைச் சுற்றிலும் ஆதிபராசக்தி பள்ளிக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மனித குலத்திற்கு தீங்கிழைக்கும் அசுரர்களை அச்சுறுத்துவதாக அமைக்கப்பட்ட திரிசூலமேந்திய சக்தியின் நடனம் அனைவரின் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது. தொடர்ந்து ஜோதியைச் சுற்றி கோலாட்டம், கும்மி ஆட்டம் நடைபெற்றது. ஐந்து வேப்பிலைச் சங்கிலிகளால் இணைக்கப்பட்ட குருஜோதியை திருமதி அம்மா ஐந்து மகளிரிடம் ஒப்படைக்க, அவர்கள் அதை ஜோதி ஊர்வல வாகனத்தில் அமர்த்தினர்.

சரியாக 5 மணிக்கு இல்லத்திலிருந்து ஜோதி ஊர்வலம் புறப்பட்டது. பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் முன்னதாக நாதஸ்வர இசையும், தொடர்ந்து தேவர் ஆட்டம், நடமாடும் குதிரை, வெள்ளைக் குதிரை, ஒயிலாட்டம், பேண்டு வாத்தியங்கள் , நையாண்டி மேளம் இவற்றுடன் பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்துள்ள பக்தர்கள் அந்த நாட்டின் பெயர் எழுதப்பட்ட பதாகைகளுடன் வர ஜோதித் திடலை அடைந்தது.

6 மணி அளவில் ஜோதித் திடலுக்கு குரு ஜோதியை எடுத்து வந்து, தைப்பூச ஜோதி ஏற்றப்படும் ஐந்து முக செப்புக்கலசத்தின் முன்பாக வைக்கப்பட்டது. மணி சரியாக 6 அடித்ததும் அம்மா அவர்கள் அருட்கூடத்திலிருந்து புறப்பட்டு, சித்தர்பீட பிரகாரம் வலம் வந்து, தைப்பூசத் திடலுக்கு எழுந்தருளிய போது மணி 6.10. குரு ஜோதி, ஐந்து முக ஜோதிக்கலசம் இரண்டிற்கும் தீபாராதனை காட்டிவிட்டு ஜோதி மேடையில் உயரே எழுந்தருளி அங்கு திருவுருவச் சிலையாக அமைந்துள்ள கருவறை அமைப்பிற்கு தீபாராதனை காட்டிவிட்டு கீழே திடலுக்கு வந்தார்கள் .

நடன நிகழ்ச்சி:
தொடர்ந்து இயற்கையை வணங்குவதையும், இயற்கையைப் பேணிக் காப்பதையும் மறந்து, இயற்கையை வதைப்பதால் ஏற்படும் நிலநடுக்க, சுனாமி போன்ற பேரழிவுகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள மக்கள் அம்மாவைச் சரணடைந்து அவர்கள் பயிற்றுவித்த தியானம், வேள்வி, பூசை முறைகளால் தங்களைக் காத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனும் கருத்தினை எடுத்துக் கூறும் வகையில் ஆதிபராசக்தி பள்ளி மாணவ மாணவியர் அமைத்திருந்த நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன.

பின்னர் ஒவ்வொரு ஆண்டைப் போலவே ஜோதிக் கலசத்திற்கு கலை நயத்துடன் கூடிய திருஷ்டிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து ஆன்மிககுரு அருள் திரு அம்மா அவர்கள் அங்கிருந்த குழந்தைகளின் கைகளில் அமைதிப் புறாக்களைக் கொடுத்துப் பறக்கவிட்டார்கள் . 6.35 மணிக்கு தம் திருக்கரங்களால் அம்மா அவர்கள் தைப்பூச ஜோதிக் கலசத்தின் உச்சியில் உள்ள மைய ஜோதியை ஏற்ற, திருமதி அம்மாவும், விழாவிற்கு வந்திருந்த முக்கியப் பிரமுகர்களும் உச்சியிலும், ஐந்து முகங்களிலும் ஜோதி ஏற்றினார்கள் . அம்மா அவர்கள் ஜோதிக்குக் கற்பூர தீபாராதனை காட்டினார்கள் . தொடர்ந்து ஜோதிக்கலசம் ஜோதி மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்த கருவறை அமைப்பின் முன் நிறுவப்பட்டது. அம்மா அவர்கள் ஜோதிக்கு தீபாராதனை காட்டியபின், ஜோதியை வலம் வந்து பக்தர்களுக்கு தீபாராதனை தெரியும் படி காட்டிட, பக்தர்கள் ‘ஓம்சக்தி! பராசக்தி’ எனும் வாழ்த்தொலிகளுடன் தீபாராதனையை வணங்கினார்கள் .

தொடர்ந்து அம்மா அவர்களும், திருக்குடும்பத்தாரும் ஜோதிக்கு எண்ணெய் ஊற்றினார்கள் . அம்மா அவர்கள் ஜோதிமேடையின் ஓரத்திற்கு வந்து தம் இரு திருக்கரங்களையும் உயர்த்தி சுற்றி வந்து அனைத்து திசைகளிலும் அமர்ந்திருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள்.அம்மா கீழே இறங்கி வந்து இசைக் குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார்கள் .

திரு. சிவமணி தனது இசைக் கோல்களை அம்மாவிடம் கொடுத்து ஆசிபெற்றார்.அதுபோல திரு பாலபதாஸ்கரும் தம் வயலினை அம்மாவிடம் கொடுத்து ஆசிபெற்றார்.அந்த இசைக் கருவிகளை சில நொடிகள் அம்மா வாசித்துக்காட்ட அந்த இடமே மகிழ்ச்சியால் துள்ளியது.

விழாவில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவர் திரு. ரி. அருள்மொழி ஐ.ஏ.எஸ், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. தணிகாசலம், இரயில்வே உயரதிகாரி திரு.செந்தில்குமார், அரசு உயரதிகாரி ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சி மாநில உபதலைவர் திருமதி வானதி ஸ்ரீநிவாசன், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்த பக்தர்களை இயக்கத்தின் பாதுகாப்புக் குழுவினர்,இயக்கத்தின் துணைத் தலைவர் சக்தி திரு.கோ.ப. செந்தில்குமார் தலைமையில் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து, திறமையாக அவர்களை அமர வைத்து விழாவைக் கண்குளிரக் கண்டு மகிழ வழிகாட்டினர்.விழா ஏற்பாடுகளை இயக்கத்தலைவர் திருமதி அம்மா தலைமையில் ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி மன்றங்களும், தொண்டர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.
                                         ஓம் சக்தி!